கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம்
வாணாபுரம் அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாணாபுரம்
வாணாபுரம் அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவில் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள தொண்டமானூரில் தென்பெண்ணை ஆற்று ஓரத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது.
இந்த அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாவட்டங்கள் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தென்பெண்ணைஆற்றில் பொங்கல் வைத்து ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டு கோவிலில் படைத்து வழிபாடு செய்வார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் அம்மன் தேர் எங்கள் பகுதிக்கு வந்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
வாக்குவாதம்
இதுகுறித்து தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அப்துல்ரகூப் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் முன்னிலையில் இரு தரப்பை சேர்ந்த பொதுமக்களிடம் அமைதி கூட்டம் நடந்தது. இதில் கடந்த ஆண்டை போலவே திருவிழா நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று 3-வது செவ்வாய்க்கிழமையை திருவிழா நடந்தது. அப்போது ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் அம்மன் தேர் வீதி உலா எங்கள் பகுதிக்கு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆனால் மற்றொரு தரப்பினர் உங்கள் பகுதிக்கு வராது என்று கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மற்றொரு தரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர்கள் தேர் அந்த வழியாக செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம் வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்யமுயன்றனர்.
போலீஸ் குவிப்பு
ஆனால் இருதரப்பைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டினர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு அப்பகுதி சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அப்பகுதியில ்கூடி இருந்த கூட்டத்தை கலைய செய்தனர்.
பின்னர் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் அந்த பகுதியில் அணிவகுப்பு நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.