விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி மையம் அமைக்க வேண்டும்


விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி மையம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 July 2023 12:30 PM IST (Updated: 11 July 2023 12:30 PM IST)
t-max-icont-min-icon

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ரேஷன் கடைகளில் உதவி மையம் அமைக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ரேஷன் கடைகளில் உதவி மையம் அமைக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக முதன்மை பயிற்சியாளர்களான துணை தாசில்தார்கள், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.


இதற்கு தலைமை தாங்கி கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:-


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் சிறப்பு திட்டமாக அறிவித்து செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்கு ரேஷன் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


தேவையான விண்ணப்பங்கள்


ரேஷன் கடை பணியாளர்கள் தங்களது பகுதிக்கு தேவையான விண்ணப்பங்களை மண்டல அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ரேஷன் கடை பணியாளரும் தங்களது பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு தெரு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தை வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.


அதில், குடும்ப அட்டை எண், எந்த தேதிகளில் எப்போது முகாம்க ளுக்கு வரவேண்டும் என்ற விவரம் இருக்கவேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

செல்போனில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். இதற்கு பயோமெட்ரிக் சாதனங்களையும், செல்போன்களையும் இணைக்கும் மொபைல் கனெக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.


உதவி மையங்கள்


விண்ணப்பங்களை 70.75 சதவீதம் பேர் அவர்களாகவே பூர்த்தி செய்து விடுவார்கள். ஆனால் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க ரேஷன் கடைகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் இல்லம்தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு பணியில் ஆதார் எண், குடும்ப அட்டை எண், மின் இணைப்பு எண், குடும்ப உறுப்பினர் விவரங்கள் ஆகியவை சரியாக பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதா என்பதை சரிபார்த்து, தவறின்றி விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.


வங்கிக் கணக்கு


குடும்ப அட்டை, ஆதார் அட்டை இல்லாதவர்கள், ஒருவேளை மிகவும் வறுமையில் இருக்கலாம். அவர்களை தனியாக ஒரு பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.

அவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு முதலில் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு கூட வங்கி கணக்கு தொடங்கிக் கொள்ளலாம்.


இந்த பயிற்சி வகுப்பில் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான விரிவான விபரங்கள் வழங்கப்படும். எனவே அனைவரும் இந்த பயிற்சி வகுப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முகாம் எப்படி அமைக்க வேண்டும். அங்கு என்ன வசதிகள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் இந்த பயிற்சியில் வழங்கப்படும். சந்தேகங்களை பயிற்சியிலே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்.


Next Story