கருமலையில் மூலிகை பண்ணை அமைக்கவேண்டும்
இடையக்கோட்டை அருகே கருமலையில் மூலிகை பண்ணை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருமலை
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டைக்கு கிழக்கே இயற்கை அரண்போல் நீண்டு விரிந்த அழகிய மலைத்தொடர் கருமலை. அடர்த்தியான மரங்களை ஆடையாகப் போர்த்தியது போல் இருப்பதால் இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் தொலைவிலிருந்து பார்க்கும்போது யானை ஒன்று தனது துதிக்கையை முன்னால் நீட்டியவாறு படுத்துள்ளது போலத் தோன்றுவதால் கருமலை என்றழைக்கப்படுகிறது. தமிழில் யானையைக் குறிக்கும் சொல் 'கரி' என்பதாகும். கரிமலை என்பது மருவி 'கருமலை'யானது.
சுமார் 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கருமலையின் உயரம் கடல்மட்டத்தில் இருந்து அதிகபட்சம் 744 மீட்டர் (2441 அடி) வரை கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் இணை குன்றாகத் திகழ்கிறது. இம்மலையில் முன்பு கரடி, வரையாடு, மான்கள் உள்ளிட்ட விலங்குகளும், பல்வேறு பறவையினங்களும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மயில்களும், சில வகை பறவைகளும் மட்டுமே உள்ளன.
கருமலை உச்சியில் சுமார் 250 ஆண்டுகள் பழமையான மாயக்கண்ணன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
சந்தைமேடு
மலை உச்சியில் 'பாழி' என்றழைக்கப்படும் நன்னீர் சுனை (ஊற்று) ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் மலையில் உற்பத்தியாகும் சிற்றோடைகள் நங்காஞ்சியாற்றில் கலக்கின்றன. புல்லாக்கவுண்டனூரின் கிழக்குப் பகுதியில் கருமலையின் அடிவாரத்தில் முன்பு மக்கள் வசித்த குடியிருப்பு இருந்ததாகவும், அங்குள்ள பெரிய மைதானம் போன்ற பாறையில் சந்தை நடந்துவந்ததாகவும், அப்பாறை சந்தைமேடு என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கரூர்-திண்டுக்கல் அகல ெரயில்பாதைத்திட்டம் உருவாக்கப்பட்டபோது இடையகோட்டை வழியாகச் செல்லும் வகையில் முதலில் திட்டமிடப்பட்டு கருமலை அடிவாரத்தில் நிலமும் தேர்வு செய்யபட்டது. மலையின் குறுக்காக பாதை அமைப்பதில் சிரமம் இருப்பதாகக் கூறி, பாதை மாற்றப்பட்டு திண்டுக்கலில் இருந்து எரியோடு, பாளையம் வழியாக ெரயில் பாதை அமைக்கப்பட்டது.
மூலிகை பண்ணை
கருமலை, இடையகோட்டைக்கு இயற்கை அரணாகவும் எழில்மிகு சோலையாகவும், மயில்கள் சரணாலயமாகவும் விளங்குகிறது. மேலும் இந்த மலை அப்பகுதி மக்களுக்கு மழை அறிவிப்பு வழங்கும் இயற்கையான வானிலை மையமாகவும் உள்ளது.
ஆம், மழைக்காலங்களில் மேகங்கள் கருமலையில் இருந்து கீழ்நோக்கி இறங்கும்போது மழை பெய்யத் தொடங்கும். மேகங்கள் மேல்நோக்கிச் சென்றால் மழை விலகும் என்பது முன்னோர் கணிப்பாக உள்ளது. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மலைப்பகுதியில் பல்வேறு மூலிகை மரக்கன்றுகள் நட்டு வைத்து மூலிகை பண்ணை அமைக்க வேண்டும், ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைத்து மயில்கள், பறவைகளின் தாகத்தை தீர்க்க வனத்துறை கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.