போரூரில் மெட்ரோ ரெயில் பணியின்போது துளைபோடும் ராட்சத எந்திரம் மோதி வீடு இடிந்தது


போரூரில் மெட்ரோ ரெயில் பணியின்போது துளைபோடும் ராட்சத எந்திரம் மோதி வீடு இடிந்தது
x

போரூரில் மெட்ரோ ரெயில் பணியின்போது துளைபோடும் ராட்சத எந்திரம் மோதியதில் வீடு இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

போரூர்,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுகின்றன.

இதில் போரூர் ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் பணியின்போது மெட்ரோ ரெயில் பணியாளரின் கவனக்குறைவால் சாலையில் துளையிட பயன்படுத்தப்படும் ராட்சத எந்திரம், போரூர் அஞ்சுகம் நகரில் உள்ள பார்த்தியநாதன் என்பவரது வீட்டின் மீது பயங்கரமாக மோதியது.

வீடு இடிந்தது

இதில் வீட்டின் மேல் தளத்தில் இருந்த சுவர் மற்றும் சிமெண்டு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்தியநாதன் உள்பட அவரது குடும்பத்தினர் 3 பேர் வீட்டில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் யாருக்கும் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.

ராட்சத எந்திரம் மோதியபோது பயங்கர சத்தம் கேட்டதால் பூகம்பம் வந்துவிட்டதாக நினைத்து அருகே இருந்த வீடுகளில் வசிப்பவர்களும் அலறி அடித்து வெளியே ஓடிவந்து பார்த்தனர்.

பொதுமக்கள் வாக்குவாதம்

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மெட்ரோ ரெயில் ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மெட்ரோ ரெயில் பணிக்காக துளையிட பயன்படுத்தப்படும் இந்த ராட்சத எந்திரம் சுமார் 100 டன் எடையில் 200 அடிக்கு மேல் உயர்த்தும் வசதி் கொண்டது. சாய்வாக இருக்கும் அந்த எந்திரத்தை துளைபோட பயன்படுத்த செங்குத்தாக நிலை நிறுத்த வேண்டும். அப்படி நிலை நிறுத்தும் போது அருகில் இருந்த வீட்டை கவனிக்காமல் ஆபரேட்டர் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போரூர் போலீசார், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story