கோரிக்கை நிறைவேறாவிட்டால் உண்ணாவிரத போராட்டம்
அரசுத்துறை வாகன ஓட்டுனர்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சங்க மாநில தலைவர் சுப்பிரமணி கூறினார்.
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் வனராஜன் வரவேற்றார். மாநில தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள வாகன ஓட்டுனர்கள் பணியிடத்தை காலமுறை ஊதியப்படியும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவின் அடிப்படையிலும் நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி, பொருளாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்ட முடிவில் மாநில தலைவர் நிருபர்களிடம் கூறுகையில், அரசு துறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும். அரசுத்துறை வாகன ஓட்டுனர்களின் நிலைகளை கிரேடு-8, கிரேடு-11, கிரேடு-15 என வகைப்படுத்தி மத்திய அரசுத்துறை வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் சலுகை போல் தமிழ்நாடு அரசுத்துறை வாகன ஓட்டுனர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். விரைவில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்றார்.