நகை வியாபாரியை தாக்கி ரூ.1¼ கோடி பறிப்பு


நகை வியாபாரியை தாக்கி ரூ.1¼ கோடி பறிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2023 1:15 AM IST (Updated: 12 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருேக நகை வியாபாரியை தாக்கி ரூ.1¼ கோடி பறித்த பெண் உள்பட 6 பேர் போலீசில் சிக்கினர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

கோவை அருகே நகை வியாபாரியை தாக்கி ரூ.1¼ கோடி பறித்த பெண் உள்பட 6 பேர் போலீசில் சிக்கினர்.

தங்க நகை வியாபாரி

கோவை தெலுங்குபாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 44). இவர் தங்க நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் பிரகாஷ் தனது தொழில் சம்பந்தமாக ஒரு தனியார் வங்கிக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அங்கு அவருக்கு, வங்கி மேலாளர் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்பவர் அறிமுகம் ஆனார். அவர், தன்னை ரியல் எஸ்டேட் அதிபர் என்று பிரகாஷிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

இதற்கிடையில் பிரகாஷை தொடர்பு கொண்ட குட்டி, 'தனக்கு தெரிந்த நபரிடம் ரூ.1 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளது, அதை தங்க நகை விற்பனை தொழிலில் கைமாற்றிவிட்டு விட்டு ரூ.85 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் திரும்ப தந்தால்போதும், மீதமுள்ள தொகையை கமிஷனாக நீங்களே வைத்துக்கொள்ளலாம்' என்று கூறினார். கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தாலும், அதை விட அதிக தொகைக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பிரகாஷ், ஒப்புக்கொண்டார். அவர்கள் பொள்ளாச்சியில் பணத்தை மாற்றிக்கொள்ள திட்டமிட்டனர்.

ரூ.1¼ கோடி

இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 4 மணியளவில் பிரகாஷ் தனது டிரைவர் மற்றும் வங்கி மேலாளர் ஆகியோருடன் 500 ரூபாய் நோட்டுகளாக தன்னிடம் இருந்த ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு காரில் சென்றார்.

அங்கு குட்டி மற்றொரு காரில் வந்தார். அந்த காரில் பெண் உள்பட மேலும் 2 பேர் இருந்தனர். அவர்கள் குட்டியை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடம்

அதன்பிறகு பிரகாஷை சந்தித்த குட்டி, 'தற்போது காரில் சென்றவர்களிடம்தான் பணம் உள்ளது, அவர்கள் அம்பராம்பாளையம் பகுதியில் காத்திருக்கிறார்கள், அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பணத்ைத மாற்றிக்கொள்ளலாம்' என்று தெரிவித்தார்.

இதை நம்பிய பிரகாஷ், அவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு அம்பராம்பாளையத்துக்கு சென்றார். அங்கு ஏற்கனவே காத்திருந்த 2 பேர் தவிர மேலும் 4 பேர் உடனிருந்தனர். அவர்களிடம், 500 ரூபாய் நோட்டுகளை காட்டும்படி பிரகாஷிடம் குட்டி தெரிவித்தார். அதன்பேரில் தனது காரில் வைத்திருந்த ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரத்துக்கான 500 ரூபாய் நோட்டுகளை பிரகாஷ் காட்டினார்.

பறிப்பு

அப்போது திடீரென அவர்கள் 6 பேரும் சேர்ந்து, பிரகாஷ் உள்பட மற்ற 4 பேரையும் தாக்கி பணத்தை பறித்துவிட்டு, காரில் ஏறி தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் உள்பட 4 பேரும், ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடினர். தொடர்ந்து பணத்தை பறித்த பெண் உள்பட 6 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முடிவில்தான் மேலும் விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story