மதுக்கடைகளில் திருட்டில் ஈடுபட்ட கேரள ஆசாமி சிக்கினார்


மதுக்கடைகளில் திருட்டில் ஈடுபட்ட கேரள ஆசாமி சிக்கினார்
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 14 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர், பந்தலூரில் மதுக்கடைகளில் திருட்டில் ஈடுபட்ட கேரள ஆசாமி போலீசில் சிக்கினார்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர், பந்தலூரில் மதுக்கடைகளில் திருட்டில் ஈடுபட்ட கேரள ஆசாமி போலீசில் சிக்கினார்.

மதுக்கடையில் திருட்டு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காளம்புழாவில் உள்ள மதுக்கடையில் கடந்த பிப்ரவரி மாதம் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் ரூ.1½ லட்சம் திருடப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, கொள்ளையில் ஈடுபட்டது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பாடு பகுதியை சேர்ந்த ஜிம்மி ஜோசப்(வயது 45) என்பது தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்து, கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் ஜிம்மி ஜோசப் வெளியே வந்தார். ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இதனால் கூடலூர் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜிம்மி ஜோசப் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

தனிப்படையிடம் சிக்கினார்

இதற்கிடையில் பந்தலூர் அருகே குந்தலாடியில் உள்ள மதுக்கடையில் கடந்த மே மாதம் 3 பேர் கொண்ட கும்பல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்றது. இதை கண்ட போலீசார், அவர்களை பிடிக்க முயன்றபோது, தாக்குதல் நடத்தினர். உடனே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் சாம்பார் மணி, ரகைனா சுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் 3-வது நபரான ஜிம்மி ஜோசப் தப்பி ஓடிவிட்டார்.

அவரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் இப்ராகீம், ராமேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பாடு பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த ஜிம்மி ஜோசப்பை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story