குடியாத்தத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை
குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனையானது. இன்னும் ஒரு வாரத்தில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனையானது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் 150 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்டது. அதேபோல் மற்ற காய்கறிகளான கத்தரிக்காய், பீன்ஸ், அவரை, கேரட், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு உள்ளிட்டவைகளும் அதிரடியாக விலை உயர்ந்தது.
இதனால் நடுத்தர வர்க்கத்தினரும், பொதுமக்களும் ஓட்டல் உரிமையாளர்களும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கும் காய்கறிகள், தக்காளி விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது.
சில தினங்களாக தக்காளி ஏற்ற இறக்கத்துடன் விற்று வந்தது. கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய பொதுமக்கள் கால் கிலோ, அரை கிலோ என வாங்கி வந்தனர்.இந்த நிலையில் நேற்று குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் தக்காளி 3 ரகங்களாக விற்கப்பட்டது. முதல் ரகம் கிலோ ரூ.80-க்கும், இரண்டாம் ரகம் ஒன்றரை கிலோ ரூ.100-க்கும்,3-ம் ரகம் 2 கிலோ ரூ.100-க்கும் விற்கப்பட்டது.
பொதுமக்கள் சற்று விலை குறைந்ததால் தக்காளிகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ''ஒரு சில தினங்களாக தக்காளி விலை இறங்குமுகமாக உள்ளது. ஒரு வாரத்திற்குள் இன்னும் அதிக அளவு விலை குறைய வாய்ப்புள்ளது'' என்றனர்.
=========