சென்னை அரசு ஆஸ்பத்திரியில் வாலிபரின் நுரையீரல் அருகே சிக்கியிருந்த கத்தி அகற்றம்


சென்னை அரசு ஆஸ்பத்திரியில் வாலிபரின் நுரையீரல் அருகே சிக்கியிருந்த கத்தி அகற்றம்
x

வழிப்பறி கொள்ளையர்கள் குத்திய கத்தி, வாலிபரின் நுரையீரல் அருகே சிக்கியது. அதனை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

சென்னை

வங்கி ஊழியர்

திருவள்ளூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 23). பட்டதாரியான இவர், திருவள்ளூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து அதிகாலை 2 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் தமிழ்செல்வனை வழிமறித்து 'லிப்ட்' கேட்டு ஏறினார். சிறிது தூரம் கழித்து அந்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறினார்.

முதுகில் குத்தினர்

தமிழ்செல்வனும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர், அருகில் இருந்த கூட்டாளிகளுக்கு சைகை கொடுக்கவே 2 பேர் ஓடி வந்தனர். 3 பேரும் தமிழ்செல்வனை அடித்து உதைத்து அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை தமிழ்செல்வனின் முதுகில் குத்தினான். இதில், தமிழ்செல்வன் மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்தார். கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். கொள்ளையன் குத்திய கத்தி தமிழ்செல்வனின் கல்லீரல் மற்றும் நுரையீரல் இடையே சிக்கிக்கொண்டது.

கத்தி அகற்றம்

அந்த வழியாக சென்றவர்கள், தமிழ்செல்வனை மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த டாக்டர்கள் கத்தியை வெளியே எடுக்க முடியாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதித்து வாலிபரின் கல்லீரல் மற்றும் நுரையீரல் இடையே சிக்கிய கத்தியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். பின்னர், டாக்டர்கள் குழு கத்தியை வெற்றிகரமாக அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தமிழ்செல்வன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story