கூலித்தொழிலாளி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கூலித்தொழிலாளி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x

கூலித்தொழிலாளி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையில், அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூலித்தொழிலாளி ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நலத்திட்ட உதவிகள்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் அரசு செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

இந்த நிகழ்ச்சியின்போது திருமருகல் அருகே கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டாந்தோப்பு மேலத்தெருவை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்த அமைச்சர், அரசு செயலாளர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தேவேந்திரன், தனக்கு சொந்தமான நிலத்தில் பெருநாட்டாந்தோப்பு ஆற்றங்கரை தெருவை சேர்ந்த முனுசாமி (வயது 60), அவரது மகன்கள் குருமூர்த்தி(32), உதயக்குமார்(28) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலியை நகர்த்தி அடைத்தனர்.

சிகிச்சைக்கு அனுப்பி வைப்பு

இதனை தட்டிக்கேட்ட தனது மகளை தாக்கி காயப்படுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் கலெக்டர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து தீக்குளிக்க முயன்ற தேவேந்திரனை சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகி்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

பரபரப்பு

அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கூலித்தொழிலாளி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை

இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் பகுதியில் இடப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் முன்பு கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் இப்பிரச்சினையை பெரிதாக்கும் நோக்கத்திலும், போலீஸ்துறை மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்படுவது போல் தெரிய வருகிறது என்றார்.
Next Story