மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

தக்கோலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தொழிலாளிக்கு ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

மதுகுடித்து விட்டு தகராறு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா, தக்கோலம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 40). முடிவெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ராதா (34). இவர்களுக்கு தீபக் (12), ரூபன் (7) என்ற இரு மகன்கள் உண்டு. முனியப்பன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் ராதா கடந்த 2018-ம் ஆண்டு மகன்களை விட்டு விட்டு காஞ்சீபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கேயே 4 மாதங்கள் தங்கி ஓட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த நேரத்தில் முனியப்பனின் தங்கையான ரேவதி, முனியப்பன் குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.

கிணற்றில் தள்ளி கொலை

மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி முனியப்பன் காஞ்சீபுரத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவருடன் வருவதற்கு ராதா மறுத்து, மகன்களை அழைத்து வந்து தன்னுடன் காஞ்சீபுரத்தில் தங்கி விடுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் இரவு அங்கேயே தங்கி விட்டு, மறுநாள் தனது வீட்டிற்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர், தனது இரு மகன்களையும் நீச்சல் பயிற்சிக்கு அழைத்து செல்வதாக தனது தங்கையிடம் கூறிவிட்டு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு இரண்டு மகன்களையும் கிணற்றில் தள்ளி விட்டு தப்பியோடியுள்ளார். அப்போது மூத்தமகன் தீபக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மேலேவந்து தனது அத்தையிடம் சென்று நடந்ததை கூறியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கிண்ற்றில் விழுந்த ரூபனை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் ரூபன் இறந்துவிட்டான்.

ஆயுள் தண்டனை

இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் வழக்கை விசாரித்து மகனை கிணற்றில் தள்ளி கொன்ற முனியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதைத்தொடர்ந்து முனியப்பன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story