விழுப்புரத்தில் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்த ஏரி; ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
விழுப்புரத்தில் கழிவுநீர் கலப்பதால் ஏரி மாசடைந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொன்னேரி
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 506 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் 780 ஏரிகளும் உள்ளன. இதில் விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சாலாமேடு பொன்னேரி. இந்த ஏரியானது சுமார் 140 ஏக்கர் பரப்பளவை கொண்டது. மழைக்காலங்களில் இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் மூலம் விழுப்புரம் நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் மற்றும் நகரை சுற்றியுள்ள காவணிப்பாக்கம், வேலியம்பாக்கம், சாமிப்பேட்டை, கொளத்தூர், பானாம்பட்டு, பில்லூர் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு பாசன வசதிக்கும் முக்கியமானதாக விளங்கி வருகிறது. இந்த ஏரியின் பாசனத்தை நம்பியே ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர்.
கழிவுநீர் கலப்பு
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இங்குள்ள ஏரியில் கழிவுநீர் கலந்து ஏரி நீர் மாசடைந்துள்ளது. குறிப்பாக ஏரியின் கரையோரங்களில் வசிக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மட்டுமல்லாது நகரின் பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் இந்த ஏரியில் கலந்து வருகிறது. அதுமட்டுமின்றி விழுப்புரத்தில் உள்ள சாராய ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் சாலாமேடு பொன்னேரிக்கு செல்லும் வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுவதால் அவை ஏரியில் கலந்து தண்ணீரை மாசுபட வைத்துள்ளது.
இதன் காரணமாக ஏரியில் உள்ள தண்ணீர் நிறம் மாறியுள்ளதோடு அங்கு வளர்ந்திருக்கும் மரங்கள் ஒவ்வொன்றாக அழுகி வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பைக்கிடங்காக...
மேலும் இந்த ஏரி குப்பை கிடங்காகவும் மாற்றப்பட்டு குப்பை, கட்டிட கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஏரி நீர் மாசடைந்துள்ளதால் நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பலவித தொற்றுநோய், தோல் வியாதிகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி மாசடைந்த ஏரி நீரால் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஏரியில் தேங்கியிருக்கும் கழிவுநீரில் பன்றிகள், நாய்கள் மேய்ந்து சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.
இவற்றையெல்லாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஏரிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏனோ நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்போக்குடன் இருப்பதாக விவசாயிகள், பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் செலுத்தி சாலாமேடு பொன்னேரி உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்க்காலை தூர்வாரவேண்டும்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விழுப்புரம் நகரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பதில் சாலாமேடு பொன்னேரிக்கு முக்கிய பங்கு உண்டு. அதுபோல் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசனம் பெறவும் இந்த ஏரி பயன்பட்டு வந்தது. ஆனால் இன்றைக்கு இந்த ஏரியில் கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக வந்து கலக்கிறது. இதனால் கழிவுநீர் ஏரியாக மாறிவிட்டதால் ஏரியை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏரிக்கு வரக்கூடிய கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றும் எந்திரமும் சரிவர செயல்படாததால் ஏரியில் கழிவுநீர் கலந்து தண்ணீர் முழுவதும் மாசடைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் பிற்காலத்தில் ஏரியின் நிலைமை இன்னும் மோசமாகும். எனவே இந்த ஏரிக்கு வரக்கூடிய வரத்து வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்து அதன் வழியாக தென்பெண்ணையாற்று நீர், இங்குள்ள ஏரிக்கு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.