20 ஆண்டுகளுக்கு பிறகு லெட்சுமாங்குடியில் ஒரு வழிப்பாதை அமைப்பு


20 ஆண்டுகளுக்கு பிறகு லெட்சுமாங்குடியில் ஒரு வழிப்பாதை அமைப்பு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் 20 ஆண்டுகளுக்கு பிறகு லெட்சுமாங்குடியில் ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் 20 ஆண்டுகளுக்கு பிறகு லெட்சுமாங்குடியில் ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லெட்சுமாங்குடி சாலை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூா் அருகே உள்ள லெட்சுமாங்குடியில் திருவாரூர் சாலை, மன்னார்குடி சாலை, கொரடாச்சேரி சாலை, வடபாதிமங்கலம் சாலை என 4 வழி சாலை உள்ளது. இதனால், லெட்சுமாங்குடி சாலை எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாக இருக்கும்.

இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இதில், திருவாரூர் மற்றும் மன்னார்குடிக்கு செல்லக்கூடிய லெட்சுமாங்குடி கடைவீதி சாலை பல ஆண்டுகளாக குறுகலான சாலையாக இருந்து வருகிறது. இந்த குறுகலான சாலையில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்று விடுகின்றன.

ஒருவழிப்பாதை

வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்று விடுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவசர நோயாளிகள், வயதானவர்கள், பள்ளி மாணவர்கள், அவசரமாக வேலைக்கு செல்வோர், கடைவீதி சென்று வருவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.

இதனால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திருவாரூரில் இருந்து வரும் வாகனங்களை லெட்சுமாங்குடி ஏ.ஆர். சாலையில் சென்று ஆஸ்பத்திரி சாலை வழியாக மன்னார்குடிக்கு கடந்து செல்லும் வகையிலும், மன்னார்குடியில் இருந்து வரும் வாகனங்களை லெட்சுமாங்குடி கடைவீதி சாலை வழியாக திருவாரூர் செல்லும் வகையிலும் ஒரு வழி பாதை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

நன்றி

இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து லெட்சுமாங்குடியில் ஒரு வழிப்பாதை அமைத்து தந்தனர். ஒருவழிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி ' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story