தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடிய திரளான பக்தர்கள் ;முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்


தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடிய திரளான பக்தர்கள் ;முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
x
தினத்தந்தி 21 Jan 2023 11:51 PM IST (Updated: 21 Jan 2023 11:58 PM IST)
t-max-icont-min-icon

தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கன்னியாகுமரி

தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தை அமாவாசை

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைத்து மாதம் தோறும் வரும் அமாவாசை தினத்தன்று படையலிட்டு, காகத்துக்கு உணவு வைப்பது பலரது வழக்கம். இதில் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியவை முக்கியமானவை ஆகும்.

அன்றைய தினம் நீர்நிலைகளில் நீராடி பலிகர்ம பூஜை செய்து, தர்ப்பணம் கொடுப்பதால் மறைந்த முன்னோர்கள் அதிக ஆசியை வழங்குவார்கள் என்பது நம்பிக்கை.

அதன்படி தை அமாவாசையன்று கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

தை அமாவாசையான நேற்று அதிகாலை 3 மணியில் இருந்தே கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள்.

தர்ப்பணம்

அதைத்தொடர்ந்து பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து இருந்த வேத மந்திர ஓதுபவர்களிடம் சென்று தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்மபூஜையை செய்தனர்.

பின்னர் பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பைப்புல் ஆகியவற்றை எடுத்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.

பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சிறப்பு வழிபாடு

தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிர்மால்ய பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகமும், தீபாராதனையும் காட்டப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

நள்ளிரவு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வருடத்தில் ஐந்து முறை மட்டுமே திறக்கும் கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மூன்று முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும், பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், தீபாராதனையும் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


Next Story