கன்றுக்குட்டியை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி

ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது.
வால்பாறை
ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது.
தொழிலாளர்கள் அதிர்ச்சி
வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அதனருகில் உள்ள புல்தரையில் கால்நடைகள் மேய்ந்து கொண்டு இருந்தன.
அங்கு திடீரென வந்த சிறுத்தைப்புலி ஒன்று, புல்தரையில் மேய்ந்து கொண்டு இருந்த கன்றுக்குட்டியை கடித்து வனப்பகுதிக்கு இழுத்து செல்ல முயன்றது. இதை கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கூச்சலிட்டு சிறுத்தைப்புலியை விரட்டினர்.
உடனே கன்றுக்குட்டியை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சிறுத்தைப்புலி ஓடி மறைந்தது. பின்னர் மானிம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
வனத்துறையினர் கண்காணிப்பு
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கன்றுக்குட்டியை பார்வையிட்டனர். அப்போது கன்றுக்குட்டி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த தேயிலை தோட்ட பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் தொழிலாளர்கள் கண் முன்னே கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






