பந்தலூர் அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை
பந்தலூர் அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை
பந்தலூர்
பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 2 பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இந்த கால்நடைகளை வளர்த்து வருகிறார். புல்வெளிக்கு மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு மட்டும் வீட்டில் உள்ள கொட்டகைக்கு திரும்பவில்லை. இதனால் மணிகண்டன் இதுகுறித்து சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் பசுமாட்டை தேடி சென்றனர். அப்போது காவயல் புல்வெளிக்குள் சிறுத்தை தாக்கி பசுமாடு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சேரம்பாடி கால்நடை டாக்டர் நவீன் பசுமாட்டின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:- சிறுத்தை அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்து பசுமாடுகளையும் ஆடுகளையும் வளர்ப்பு பிராணிகளையும் கடித்து கொன்று வருகிறது. தேயிலைதோட்டங்களில் பணியாற்றும் போது தோட்டங்களுக்குள்ளும் புகுந்து விடுகிறது. சாலை ஓரங்களிலும் உலாவருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள். அதனால் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.