குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை -ஊட்டியில் பரபரப்பு
ஊட்டியில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை நாயை வேட்டையாடிக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி
ஊட்டியில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை நாயை வேட்டையாடிக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வனவிலங்குகள் நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஓவேலி, மஞ்சூர் உள்பட 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அதிக அளவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாலை நேரங்களில் ஊட்டி சாலையில் கலெக்டர் பங்களா பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.நேற்று அதிகாலை மான்டரசோ காலனியில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டிற்குள் நுழைய முயன்றது.
நாயை வேட்டையாடிய சிறுத்தை
சிறுத்தையின் நடமாட்டத்தை வீட்டின் மாடியில் இருந்து கவனித்த நாய் பயங்கரமாக குரைக்க தொடங்கியது. இதையடுத்து அருகில் இருந்த படிக்கட்டு வழியாக மாடிக்கு வந்த சிறுத்தை நாயை வேட்டையாடி கொன்று கொண்டு செல்ல முயற்சி செய்தது.
நாய் சத்தம் கேட்டு அங்கு வந்த உரிமையாளர் ஜான் சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். இதனால் சிறுத்தை நாயே கீழே போட்டு விட்டு தப்பி சென்று விட்டது. இதற்கிடையே சிறுத்தை கவ்வியதில் நாய் பரிதாபமாக இறந்து விட்டது. சிறுத்தை வந்து நாயை வேட்டையாடிய சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் இந்த பகுதியில் அதிக அளவில் உள்ளது. ஏற்கனவே 5-க்கும் மேற்பட்ட முறை இந்த சிறுத்தையை இந்த பகுதியில் பார்த்து உள்ளோம். வனத்துறையினர் விரைவில் கூண்டு வைத்து இந்த சிறுத்தையை பிடிக்காவிட்டால் உயிர் பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.