4 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை - வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது...!
ஊட்டி அருகே 4 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த 10-ம் தேதி தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளி கிஷாந்த் என்பவரின் 4 வயது மகள் சாரிதாவை தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் கிராம பகுதியில் அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க முதற்கட்டமாக கடந்த எழு நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் சார்பில் தேயிலை தோட்டங்களில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் வனத்துறையினர் கடந்த இரு தினங்களுக்கு முன் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது குடியிருப்பின் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருந்தது.
சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் நேற்று கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இரண்டு கூண்டுகளை வைத்தும் அதில் வளர்ப்பு ஆடுகளை கட்டி வைத்து சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்ட இடங்களில் வனத்துறையினர் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கி இருந்தது. இந்த நிலையில் பிடிபட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.