நெல்லையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் - சபாநாயகர் அப்பாவு


நெல்லையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் - சபாநாயகர் அப்பாவு
x

“நெல்லை பொருநை அருங்காட்சியகம் அருகில் கருணாநிதி பெயரில் மிகப்பெரிய நூலகம் அமைக்க வேண்டும்” என்று சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்தார்.

திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். சட்டசபையில் அனைவருடைய கருத்துகளுக்கும் மதிப்பு தரக்கூடிய அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார். வேலைவாய்ப்பு முகாம் நடத்தி அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் பாபநாசம் அணை ஆங்கிலேயர்கள் கட்டியது. மணிமுத்தாறு அணை காமராஜர் கட்டியது. மற்ற அனைத்து அணைகளும் கருணாநிதி கட்டியது தான். அவர் 2009-ம் ஆண்டு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தார். அதன்பிறகு அந்த திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்த திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற அக்டோபர் மாதத்தில் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாபநாசம்- சேர்வலாறு அணைகளுக்கு இடையே கணால் இருப்பது போல் மணிமுத்தாறு-பாபநாசம் அணைகளையும், கொடுமுடியாறு, வடக்குபச்சையாறு அணைகளையும் கணால் மூலம் இணைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். இதற்கு திட்டம் தீட்டி முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரூ.1,200 கோடியில் குடிநீர் திட்டம் தந்துள்ளார். இதேபோல் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் அருகில் கருணாநிதி பெயரில் மிகப்பெரிய நூலகம் அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவர் அவர் கூறினார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், 'திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் அனைத்து மக்களும் பயன்பெற்று வருகிறார்கள். சித்தர்களின் சொர்க பூமியான நெல்லை வீரமும், விவேகமும் நிறைந்த மண். இது தி.மு.க.வின் கோட்டை. தற்போது இது தகர்க்க முடியாத தங்கக்கோட்டையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலத்தில் ஆகி உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளார்' என்றார்.

ஞானதிரவியம் எம்.பி. பேசுகையில், 'திராவிட மாடல் என்பது இருட்டில் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாகும். ஏழை-எளிய மக்களுக்கும், பெண்களுக்கும் தேவையான திட்டத்தை செயல்படுத்துவதாலும், இந்த ஆட்சி மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதாலும் இந்த ஆட்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளை இணைக்க வேண்டும் என்று நான் நாடாளுமன்றத்தில் பேசி உள்ளேன். மத்திய அரசு அனுமதி வழங்கினால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்' என்றார்.

அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பேசுகையில், 'பாளையங்கோட்டை மேடை போலீஸ் நிலையத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். இதை ஏற்று முதல்-அமைச்சர் மேடை போலீஸ் நிலையத்தை பழமை மாறாமல் புதுப்பித்து தந்துள்ளார். மேலும் நெல்லை மாநகராட்சிக்கும், பாளையங்கோட்டை தொகுதிக்கும் ஏராளமான திட்டங்களை தந்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி பழமையானது. இந்த மருத்துவ கல்லூரியை கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும்' என்றார்.

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசும் போது, 'நெல்லை தொகுதிக்கு தனியாக ஒரு கலைக்கல்லூரி அமைத்து தந்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை கணால் மூலம் இணைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இருந்தாலும் முதல்-அமைச்சர் நினைத்தால் இந்த திட்டத்தை நிறைவேற்றி தரலாம். இதை போல் மானூர் பெரியகுளத்திற்கு பாபநாசத்தில் இருந்து கோரையாறு அணைக்கட்டு வழியாக தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

மேயர் பி.எம்.சரவணன் பேசுகையில், 'இளைஞர் அணியில் இருந்த என்னை இந்த மாநகராட்சிக்கு மேயராக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.419 கோடி மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 32 பள்ளிக்கூடங்களில் 22 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையை சிங்கார சென்னையாக நீங்கள் மாற்றினீர்கள். உங்களுடைய வழியில் நாங்கள் நெல்லை மாநகராட்சியை சீர்மிகு மாநகராட்சியாக மாற்றி விடுவோம் என்று உறுதி கூறுகிறேன்' என்றார்.


Next Story