குளச்சல் அருகே தனியார் இடத்தில் மதுபான கடையா? கட்டுமான பணி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு


குளச்சல் அருகே தனியார் இடத்தில் மதுபான கடையா? கட்டுமான பணி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jun 2023 12:45 AM IST (Updated: 11 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே தனியார் மதுபான கடைக்கு கட்டிடம் கட்டுவதாக கூறி அதன் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குளச்சல்,:

குளச்சல் அருகே தனியார் மதுபான கடைக்கு கட்டிடம் கட்டுவதாக கூறி அதன் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மது கடைக்கு எதிர்ப்பு

குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் சந்திப்பில் ஒரு தனியார் நிலத்தில் கட்டிட பணி நடந்து வருகிறது. இங்கு மனமகிழ்மன்றம் பெயரில் தனியார் மதுபான கடை வருகிறது என தகவல் பரவியது.

இந்த சந்திப்பு பகுதியில் ஒரு கல்லூரி, ஒரு கோவில் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளும், பக்தர்கள் அங்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். எனவே மது கடை வந்து அந்த பகுதியில் குடிமகன்களின் தொல்லை அதிகமாக இருக்கும் என பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தனியார் நிலத்தில் நடைபெறும் கட்டிட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் மனோகர சிங் தலைமையில் அங்கு திரண்டனர். அங்கு தனியார் மதுபான கடைக்கு கட்டிடம் கட்டக்கூடாது என கூறினர்.

கட்டுமான பணி நிறுத்தம்

பின்னர் பேரூராட்சி தலைவர் மனோகரசிங், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேரூராட்சியின் அனுமதி பெறாமல் கட்டிடப்பணி நடந்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கட்டிட பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story