மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், கருப்பிலா கட்டளை காலனி தெருவை சேர்ந்த சரவணனின் மகன் பிரவீன் குமார்(வயது 23), அழகரின் மகன் அரவிந்த்(22) ஆகியோர் கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பிரவீன்குமார், அரவிந்த் ஆகியோர் கீழப்பழுவூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பிரவீன்குமார் ஓட்டினார். மேம்பாலம் அருகில் சென்றபோது அந்த வழியாக கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் சர்க்கரை குளத்தெருவை சேர்ந்த ஜெயபால் (48) ஓட்டி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த அரவிந்தை சிகிச்சைக்காகவும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.