மனைவியுடன் லாரி டிரைவர் தீக்குளிக்க முயற்சி

மனைவியுடன் லாரி டிரைவர் தீக்குளிக்க முயன்றார்.
திருச்சி இனாம்குளத்தூரை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 35). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் திருச்சியில் இருந்து நெல்லைக்கு லாரியில் வாழைத்தார்களை கொண்டு சென்று இறக்கிவிட்டு, ரூ.15 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு திருச்சிக்கு புறப்பட்டார். அப்போது சதாம் உசேன் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்த போது, லாரியில் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றதாக லாரி உரிமையாளரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆனால் சதாம் உசேன்தான் அந்த பணத்தை எடுத்ததாக லாரியின் உரிமையாளர் கூறினார். இதனால் லாரி உரிமையாளருக்கும், சதாம் உசேனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த சதாம் உசேன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் இதுகுறித்து போலீசார் விசாரிக்க வராததால் விரக்தியடைந்த சதாம் உசேன், திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது மனைவியுடன், தங்களது உடல்களில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை தடுத்தனர். இது பற்றி தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் 2 பேரிடமும் விசாரித்தனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சதாம் உசேன், இனாம்குளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






