கெமிக்கல் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


கெமிக்கல் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

விக்கிரவாண்டியில் கெமிக்கல் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

திருச்சி பெரமங்கலத்தில் சோடியம் புரோமைட் சொலுயூசன் என்கிற கெமிக்கலை ஏற்றிக்கொண்டு சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பூச்சி மருந்து நிறுவனத்துக்கு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை துறையூரை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28) என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவர் கவிராஜ் (28), கிளீனர் அன்புச்செல்வன் (27) ஆகியோர் லாரியில் இருந்தனர்.

அந்த லாரி நேற்று காலை 7.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக லாரி திடீரென பழுதானது.

இதையடுத்து லாரியை அங்கு சாலையோரம் நின்றிருந்த ஒரு கன்டெய்னர் லாரி அருகே டிரைவர் நிறுத்தினார். பின்னர் லாரி பழுதை மோகன்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து லாரி பழுது சரிசெய்யப்பட்டதா என்பதை கண்டறிய மோகன்ராஜ் லாரியை இயக்கி பார்த்தார்.

லாரி தீப்பிடித்து எரிந்தது

அப்போது லாரியின் பின்புற பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் லாரியின் அடியில் இருந்து எஞ்சின் பழுதை சரி செய்து கொண்டிருந்த கவிராஜ், அன்புச்செல்வன் ஆகியோர் மீதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர். அவர்களை அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

இதனிடையே தீ அருகில் நின்ற கன்டெய்னர் லாரிக்கும் பரவி எரிய தொடங்கியது. அப்போது அதில் தூங்கிக்கொண்டிருந்த அந்த லாரியின் டிரைவரான மயிலாடுதுறையை சேர்ந்த ராஜா என்பவர் லாரியில் இருந்து வெளியே குதித்து தப்பினார்.

இது குறித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து 2 லாரிகளிலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

பெரும் விபத்து தவிர்ப்பு

இதனிடையே விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவரத்தினம், குமாரராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ விபத்தில் 2 லாரிகளும் சேதமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால், எளிதில் தீப்பற்றி எரிய கூடிய சோடியம் புரோமைட் சொலுசன் கெமிக்கல் தீப்பிடித்து எரியாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த கெமிக்கல் தீப்பிடித்து எரிந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story