ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் தீ
கடலூரில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி சாலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாரால் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களை ஏலம் விடாததால், அங்கேயே பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அதை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தீப்பிடித்து எரிந்தது
இந்நிலையில் நேற்று காலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று நேரத்தில் அந்த லாரி மள, மளவென எரிய ஆரம்பித்தது. இதனால் அந்த பகுதி கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், வார்டு கவுன்சிலர் சாய்துன்னிஷா சலீம் ஆகியோர் கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் லாரியின் முன்பக்கம் முழுவதும் தீயில் கருகி சேதமானது.
பரபரப்பு
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர். விசாரணையில், யாரோ மர்ம நபர் புகைபிடித்துவிட்டு சிகரெட்டை அணைக்காமல் வீசி சென்றதும், அந்த நெருப்பு லாரிக்கு அடியில் இருந்த குப்பையில் பற்றி எரிந்து, லாரிக்கும் பரவி எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.