கல்குவாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி


கல்குவாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி
x

பிரம்மதேசம் அருகே கல்குவாரியில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

விழுப்புரம்

பிரம்மதேசம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 84). இவர் பிரம்மதேசம் அடுத்த வெள்ளகுளம் பகுதியில் கல் குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் குவாரியில் இயங்கி வரும் பொக்லைன் எந்திரத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் ஒரு லாரியில் நேற்று காலை ஏற்றி செல்லப்பட்டது. லாரியை வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37), என்பவர் ஓட்டினார்.

குவாரியில் உதிரி பாகங்களை இறக்கி வைத்துவிட்டு, லாரி குவாரியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அப்போது லாரி என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி உடனே லாரியை நிறுத்திவிட்டு தீயை அணைக்க முயன்றார். ஆனால் லாரி முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் ரூ.41 லட்சம் மதிப்புள்ள லாரி எரிந்து சேதமானது. இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story