அதிக அளவில் மரக்கன்றுகள் நட வேண்டும்
மரக்கன்றுகளை அதிக அளவில் நடவேண்டும் என்று காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினார்.
கருத்தரங்கம்
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் ஆகியவை சார்பில் மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, காலநிலை மாற்றத்திற்கு எதிரான உதவி திட்ட இயக்குனர் மணிஷ்மீளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகளுக்கு மஞ்சப்பைகளில் மரக்கன்றுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றமும், பருவநிலை மாற்றமும் ஒன்று என பலர் எண்ணுகின்றனர். பருவநிலை மாற்றம் என்பது ஆண்டுதோறும் பருவங்களில் ஏற்படுகின்ற மாற்றம். இதுவே நீண்ட காலத்திற்கு ஏற்படுகின்ற மாற்றம் காலநிலை மாற்றமாகும். காலநிலை மாற்றம் நமது வாழ்வின் மீதும், அனைத்து உயிரினங்களின் வாழ்வின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பூமியானது மீண்டும் நெருப்பு கோளாக மாறி விடக்கூடாது என்பதற்காக இந்த கருத்தரங்கம் நடக்கிறது.
பல உயிரினங்கள் நமக்கு தெரியாமல் இறந்து கொண்டிருக்கின்றன. பல்லுயிர் பெருக்கத்தில் காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பூமிக்கு கடைசியாக வந்த நாம் பூமியை அழிப்பதில் முதல் நபராக இருந்து கொண்டிருக்கின்றோம்.
காடுகள் அழிப்பு
நம்முடைய வசதிக்காக வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை சாதாரணமாக அழித்து கொண்டிருக்கின்றோம். மரக்கன்றுகளை நாம் அதிகமாக நட வேண்டும். பறவைகள், வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிகின்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி அடுத்த தலைமுறைக்கு நாம் அனைவரும் எடுத்துச்சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கம் விக்னேஷ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.