ரகசிய திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வசித்து வந்த காதல் ஜோடி


ரகசிய திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வசித்து வந்த காதல் ஜோடி
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சினிமா பாணியில் பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வசித்து வந்த காதல் ஜோடி திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

விழுப்புரம்

திண்டிவனம்

அலைபாயுதே சினிமா படப்பாணியில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் திடீரென போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 27). திண்டிவனம் அடுத்த ஏந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நிரோஷா(22). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் திண்டிவனத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது.

இந்த நிலையில் நிரோஷாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதையறிந்து வீட்டை விட்டு வெளியேறிய நிரோஷா, கடந்த 24-ந்தேதி செல்வத்துடன் கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று கடந்த 9 நாட்களாக இருந்து வந்தனர். அப்போது நிரோஷா தனது கழுத்தில் கிடந்த தாலியை பெற்றோருக்கு தெரியாமல் மறைத்துக்கொண்டு எப்போதும் போல் இருந்தார்.

இந்த நிலையில் தனது காதல் திருமணம் பற்றி பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்து பிரச்சினை ஏற்பட்டு விடுமோ? என்று அச்சமடைந்த நிரோஷா தனது காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து பெண்ணின் பெற்றோரை, போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காதல் கணவருடன் செல்வதாக நிரோஷா உறுதியாக தெரிவித்ததால் அவருடன் நிரோஷாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story