மாலை மாற்றி திருமணம் செய்த காதல் ஜோடி


மாலை மாற்றி திருமணம் செய்த காதல் ஜோடி
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாலை மாற்றி திருமணம் செய்த காதல் ஜோடி

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் காதலர் தினம் களை கட்டியது. மாலை மாற்றி காதல்ஜோடி திருமணம் செய்துகொண்டது.

காதலர் தினம்

தினந்தோறும் பல்வேறு தினங்கள் வந்தாலும், காதலர் தினம் என்றால் காதலர்களுக்கு இனம் புரியாத காதல் உணர்வு பொங்கி வழியும். அடிக்கடி அவர்கள் சந்தித்த போதும்,காதல் தினமான அந்தநாளில் மட்டும்... சந்திக்காமல் இருக்க முடியாத ஒரு துள்ளல் உணர்வு அவர்களை பாடாய் படுத்தி விடும். அந்த வகையில் காதலர் தினமான நேற்று கோவையில் பல்வேறு இடங்களில் காதலர் முகங்கள் ரோஜாப்பூக்களாக மலர்ந்து காணப்பட்டன.

விருப்பமான ஜோடிகள் இருசக்கர வாகனங்களில் இறக்கை கட்டி பறந்த வண்ணம் இருந்தன. கோவை வ.உ.சி பூங்கா, மற்றும் ஸ்மார்ட் சிட்டி குளக்கரைகளில் காதலர்கள் வண்ணத்து பூச்சிகளாக வலம் வந்தனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை கூறி காதல் கொஞ்சலில் மனம்மகிழ்ந்துகாணப்பட்டனர்.

குளக்கரையில் குவிந்தனர்

குறிப்பாக உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம், முத்தண்ணன் குளம், ரேஸ்கோர்ஸ் மற்றும் முக்கிய பூங்காக்களில் காதலர்கள் குவிந்தனர்.

காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் ரோஜா பூக்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அன்பை வெளிப்படுத்தினர். ஒருசிலர் தங்களின் செல்போனில் காதல் செல்பி எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

அத்துடன் சாலையில் வாலிபர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் பெண்கள் சிலர் தங்களின் முகத்தை துப்பட்டாவால் மூடியவாறு பயணித்தனர்.

என்னதான் அவர்களுக்கான தினம் என்றாலும், யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதிலும் சில காதல் ஜோடிகள் ஜாக்கிரதையாக காணப்பட்டனர். அதிக நேரங்கள் எங்கும் இருக்காமல் வாகனங்களில் பறந்து கொண்டிருந்தனர். சில தியேட்டர்களில் காதலர்கள் கூட்டம் களை கட்டியது.

திருமணம்

இந்தநிலையில் நேற்றுகோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நேற்று காலை காதலர் தினம் கொண்டாட்டம் நடந்தது. அப்போது அங்கு கோவை ரத்தினபுரியை சேர்ந்த கவுதம் (வயது 25), சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ரீனா ஜெனிட்டா (23) ஆகிய இளம் காதலர்கள் வந்து இருந்தனர். அவர்கள் தாங்கள் காதலர் தினத்தன்று கலப்பு திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த இளம் காதல் ஜோடிக்கு அங்கு இருந்த நிர்வாகி ஒருவர் உறுதி மொழியை வாசித்தார். அதை காதல் ஜோடியினர் கூறினர். பின்னர் காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

பின்னர் அவர்கள் காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடி ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிா்ந்துகொண்டனர். இதுகுறித்து காதல் ஜோடி கூறும்போது, நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தபோதிலும் காதலில் உறுதியாக இருந்ததால் அவர்களிடம் எங்களை காதலை எடுத்துக்கூறினோம். இதையடுத்து அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நாங்கள் காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்ள விரும்பினோம். அதன்படி காதலர் தினத்தன்று கைகோர்த்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றனர்.

இதேபோல் இந்திய மாணவர் சங்கம் சார்பில் காந்திபுரத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது இதய வடிவிலான பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.


Next Story