ஜாமீன் கையெழுத்து போட வந்த மதுரை வாலிபர் வெட்டிக்கொலை
காரைக்குடியில் பட்டப்பகலில் மதுரை வாலிபர் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்த கும்பலை போலீசார் தேடுகிறார்கள்.
காரைக்குடி
காரைக்குடியில் பட்டப்பகலில் மதுரை வாலிபர் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்த கும்பலை போலீசார் தேடுகிறார்கள்.
நிபந்தனை ஜாமீன்
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் பகுதியை சேர்ந்தவர் வினித் என்ற அறிவழகன் (வயது 28). இவர் கடந்த மார்ச் மாதம் காரைக்குடியில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அந்த வழக்கிற்காக காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் பேரில் கையெழுத்து போட்டு வந்தார்.
இதற்காக காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போடுவதற்காக வினித் விடுதியில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது அந்த வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் கீழே இறங்கியது. அந்த கும்பல் வினித்தை ஓட,ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். பட்டப்பகலில் வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் விரட்டி சென்று கொலை செய்ததை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
வாலிபரை படுகொலை செய்த அந்த கும்பல் காரில் தப்பி சென்று விட்டது. காரைக்குடியின் மைய பகுதியில் போலீஸ் நிலையங்கள் அருகே பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்ட வினித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தேடுதல் வேட்டை
இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வினித்தின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.