கஞ்சா போதையில் தன் வீட்டுக்கு தீ வைத்தவரால் பரபரப்பு

நாட்டறம்பள்ளி அருகே கஞ்சா போதையில் தன் வீட்டுக்கு தீ வைத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டறம்பள்ளி தாலுகா, டோல்கேட் முத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஏழுமலை (வயது 42). இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவருக்கு தோல்கேட் பகுதியில் சொந்தமாக பேக்கரி ஒன்று உள்ளது.
கடையில் சரியாக வியாபாரம் இல்லாததால் கடந்த சில மாதங்களாக கஞ்சா போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
தினமும் கஞ்சா போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவரிடம் சண்டையிட்டு மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கஞ்சா போதையில் இருந்த ஏழுமலை வீட்டருகே இருந்த மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்தார். அந்த வாகனம் பற்றி எரிந்து கொண்டிந்தபோது தனது வீட்டிற்கும் அவரே தீ வைத்தார். இதனால் தீ மளமளவென எரியவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். உடனடியாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அங்கு வந்த போலீசார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறிவிட்டு சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து ஏழுமலையை அவரது உறவினர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






