அதிகபட்சமாக திண்டிவனத்தில் 10 செ.மீ. பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததில் அதிகபட்சமாக திண்டிவனத்தில் 10 செ.மீ. பதிவானது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
விழுப்புரம்
மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் இருந்து மாலை வரை இடைவிடாமல் அடை மழையாக பெய்துகொண்டே இருந்தது. அதன் பிறகு சில மணி நேரம் மழை ஓய்ந்த நிலையில் நள்ளிரவில் கனமழை பெய்தது. விழுப்புரம் மட்டுமின்றி விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், மயிலம், மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை நேற்று மாலை 6 மணி வரை விட்டுவிட்டு பெய்தது.
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர், வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக விழுப்புரம் பகுதிகளில் பெய்த கனமழையினால் விழுப்புரம் பொன் அண்ணாமலை நகர், வி.ஜி.பி. நகர், நித்யானந்தா நகர், சாரதாம்பாள் தெரு, சாலாமேடு, வழுதரெட்டி, வ.உ.சி. நகர், காந்தி நகர், பாண்டியன் நகர், மணிநகர், கணேஷ் நகர், சித்தேரிக்கரை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதன் காரணமாக அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். விழுப்புரம் அருகில் உள்ள பம்பை ஆற்றில் வெள்ளம் பெருகெடுத்து ஓடியது. மாணவர்கள், வாலிபர்கள் ஆபத்தை உணராமல் குளியல் போட்டனர். அதேபோல் ஆனாங்கூர் பகுதியில் மழையால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கோலியனுார் அருகில் உள்ள ஆழ்கால் தடுப்பு அணையில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுகிறது. இதில் இளைஞர்கள், மீன் பிடித்து வருகின்றனர்.
மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனத்தில் 109 மில்லி மீட்டர்,(10 செ.மீ) குறைந்த பட்சமாக வளவனூரில் 4 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வல்லம்........................................84
செம்மேடு...................................79
செஞ்சி.........................................71
அனந்தபுரம்..............................55
நேமூர்...........................................61
கஞ்சனூர்...................................56
வளத்தி.........................................49
கெடார்.......................................46
முண்டியம்பாக்கம்.................43
மரக்காணம்..............................37
சூரப்பட்டு.................................38
அவலூர்பேட்டை.................48
வானூர்......................................25
விழுப்புரம்..................................15
மணம்பூண்டி.............................12
முகையூர்......................................07
திருவெண்ணெய்நல்லூர்....07
கோலியனூர்.............................05