தொழில் வளர்ச்சியில் கள்ளக்குறிச்சி முதலிடம் பிடிக்க"வருங்கால சந்ததியினருக்கு தொழில் பயிற்சிகளை கற்றுக்கொடுங்கள்"கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க வருங்கால சந்ததியினருக்கு தொழில் பயிற்சிகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் பேசினார்.
தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தொழிற் சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் பேசியதாவது:- உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் 2 நாட்கள் நடைபெறவுள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு தொழில் முனைவோர்கள் நமது மாநிலத்தில் முதலீடு செய்ய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் தொழில் முனைவோர்களை அங்கீகரிக்கவும், தொழில் நுணுக்கத்தை வெளிப்படுத்தவும் இந்த மாநாடு பயனுள்ளதாக அமையும்.
மாவட்ட தொழில் மையம்
தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக கொண்டுவர ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தொழில் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பல்வேறு தொழில்களுக்கு பயிற்சிகள் மற்றும் கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தொழில் பயிற்சிகள் மட்டுமின்றி நாம் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புவிசார் குறியீடான மரச்சிற்பங்களை நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது .இவ்வாறு நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும்.
முதல் இடம்
தொழில் வளர்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழகத்தில் 8-ம் இடம் பிடித்துள்ளது. எனவே நாம் முதல் இடத்தை பிடிப்பதற்கு வருங்கால சந்ததியினருக்கு தொழில் பயிற்சிகளை கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் முனைவோர்கள் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து கலெக்டர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன், 68 கைவினை கலைஞர்களுக்கு கைவினை தொழில் பதிவு சான்றிதழையும் வழங்கினார். கூட்டத்தில் அரசு அலுவலர்கள், கைவினை கலைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.