கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் -ராமதாஸ்
கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வயிற்றில் கருவை சுமந்த நிலையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறைக்கு சென்ற விடுதலை போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாளின் 133-ம் பிறந்தநாளில் தாயகத்தின் விடுதலைக்காக அவர் நடத்திய போராட்டங்களை நினைவுகூர்வோம். அஞ்சலையம்மாளின் தியாகத்தை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த கடலூரில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி அவர் வாழ்ந்த சுண்ணாம்புக்காரத் தெரு காந்தியடிகள் பூங்காவில் அமைக்கப்பட்ட சிலை இன்னும் திறக்கப்படவில்லை. அந்த சிலையை உடனடியாகத் திறக்கவும், கடலூரில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அஞ்சலையம்மாளின் துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார். அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். அவருடைய பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம். அவரது தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் கடலூர் கலெக்டர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும்' என்று கூறியுள்ளார்.