பால் சேகரிப்பு மையம் அமைக்க வேண்டும்
பூம்புகார் அருகே உள்ள மேலவெளியில் பால் சேகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என கலெக்டருக்கு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
பூம்புகார் அருகே உள்ள மேலவெளியில் பால் சேகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என கலெக்டருக்கு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசுமாடு வளர்ப்பு
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் ஊராட்சிக்கு உட்பட்ட மேலவெளி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும் உள்ளது. இவர்கள் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
தற்போது தங்கள் மாடுகள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பாலை தனியாரிடம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் போதிய விலை மற்றும் உரிய நேரத்தில் பணம் பெறுவதில் சிரமங்கள் உள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
கலெக்டருக்கு கோரிக்கை
எனவே இந்த பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு காவிரிப்பூம்பட்டினம் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கீழ் ஒரு பால் சேகரிப்பு மையத்தை மேலவெளியில் அமைத்து தர வேண்டும் என்றும், இந்த மையத்தின் மூலம் சேகரிக்கப்படும் பாலுக்கு உரிய தொகை உத்திரவாதமாக கிடைக்கும் என்றும் கிராம மக்கள் கூறுகிறார்கள். மேலும் அவர்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே பால் சேகரிப்பு மையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பூம்புகார் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவல்லி ராஜா மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார்.