கொடையாஞ்சி கிராமத்திற்கு மினி பஸ் இயக்க வேண்டும்


கொடையாஞ்சி கிராமத்திற்கு மினி பஸ் இயக்க வேண்டும்
x

வாணியம்பாடியில் இருந்து கொடையாஞ்சிக்கு மினி பஸ் இயக்க வேண்டும் என குறைதீர்வு நாள்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பத்தூர்

குறை தீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பொதுநலன் சார்ந்த 344 மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

மினி பஸ்

எங்கள் கிராமத்தில் இருந்து பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாணியம்பாடிக்கு தினமும் சென்று வருகின்றனர். இந்த பாதை குறுகியதாக உள்ளது. இதனால் 1999-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்த தனியார் மினி பஸ் 2015-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இதனால் எங்கள் கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்ல மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் எங்கள் ஊர் புண்ணியஸ்தலமாக இருப்பதால், இங்குள்ள காசி ஈஸ்வரரை வணங்கவும், பாலாற்றில் புனித நீராடவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். அவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே வாணியம்பாடியில் இருந்து பெரியபேட்டை வழியாக கொடையாஞ்சி, அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை வரையிலான வழித்தடத்தில் அரசு சார்பில் மினி பஸ் இயக்க வேண்டும்.

பாதுகாப்பு வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மட்றப்பள்ளி மேற்கத்தியானூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி காஞ்சனா அளித்த மனுவில், எனது கணவர் சங்கர் (வயது 37) ராணுவ பணியில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்தார். இதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட பணப்பலன்கள், காப்பீடு தொகை ஆகியவற்றை என் கணவரின் தாயார் புஷ்பா, தந்தை நடராஜன், கணவரின் தம்பி சீனிவாசன் ஆகியோர் அபகரித்துக்கொண்டு என்னையும், என் மகள் தேஜாஸ்ரீ (12), மகன் எழில் அமுதன் (7) ஆகியோரையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.

கணவரின் தம்பி போலீசில் பணியாற்றி வருவதால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே, எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ்ராஜா, கலால் உதவி ஆணையர் ஜோதிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story