சாத்தூரில் பள்ளத்தில் சிக்கிய மினி பஸ்


சாத்தூரில் பள்ளத்தில் சிக்கிய மினி பஸ்
x

சாத்தூரில் பள்ளத்தில் மினி பஸ் சிக்கியது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் பள்ளத்தில் மினி பஸ் சிக்கியது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் குழாய் பதிக்கும் பணி

சாத்தூரில் மதுரை-கன்னியாகுமரி நெடுஞ்சாலை மெயின் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து நகர் போலீஸ் நிலையம் வரை சாலையில் குடிநீர் வடிகால் வாரியத்தால் புதிய குடிநீர் குழாய் பதிப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் சாலைகள் பல மாதங்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஆதலால் மழைக்காலங்களில் மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலையில் வருபவர்கள் பள்ளம் இருக்கும் இடம் தெரியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

போக்குவரத்து நெரிசல்

இந்த சாலையில் வங்கிகள், போலீஸ் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், தபால் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பொதுப்பணித்துறை அலுவலகம், நீதிமன்றம் மற்றும் வியாபார நிறுவனங்கள் உள்பட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மேலும் தூத்துக்குடி, நெல்லை, இருக்கன்குடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், உள்ளூர் மினி பஸ்களும் இந்த சாலை வழியாக தான் செல்கின்றன.

காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் சேதமடைந்த சாலையை கடந்து செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பள்ளத்தில் சிக்கிய பஸ்

அவசர காலத்தில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவை இந்த சாலையை பயன்படுத்த முடியாததால் நான்கு வழிச்சாலை வழியாக நீண்ட தூரம் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்தநிலையில் நேற்று பெய்த சாரல்மழையினால் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மினிபஸ் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலையை நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story