வனத்துறை அதிகாரிகளுக்கு நவீன பாதுகாப்பு கருவி
வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு நவீன பாதுகாப்பு கருவி வழங்கப்பட்டு உள்ளது.
வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு நவீன பாதுகாப்பு கருவி வழங்கப்பட்டு உள்ளது.
வனவிலங்குகள்
கோவை வனகோட்ட பகுதியில் கோவை, மதுக்கரை, பெரிய நாயக்கன்பாளையம், போளுவாம்பட்டி, காரமடை, மேட்டுப் பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, கழுதைப்புலி, செந்நாய், கரடி, காட்டெ ருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
அவை உணவு தேடி அடிக்கடி மலையடிவார கிராமங்கள் மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மனித- விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
பாதுகாப்பு கருவி
இதை தடுக்க வனத்துறை, வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டு வருகிறார்கள். அப்போது அவர்களும் வன விலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் ஏற்படுகிறது.
வனவிலங்குகளின் தாக்குதலால் வனத்துறையினர் பலர் காயம் அடைந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வனத் துறை அதிகாரிகளுக்கு நவீன பாதுகாப்பு கருவி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சோதனை அடிப்படையில் இந்த கருவி வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தேவைக்கு ஏற்ப வாங்கப்படும்
டார்ச் லைட் போன்று 2 அடி உயரம் கொண்ட இந்த பாதுகாப்பு கருவியை வனத்துறையினர் ரோந்து செல்லும்போது கையில் வைத்திருக்க வேண்டும். அதன் எடை குறைவாக தான் இருக்கும்.
கரடி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் தாக்க வரும் போது டார்ச்லைட் போன்ற கருவியை வனத்துறையினர் அதன் மீது வைத்து பொத்தானை அழுத்தினால் மின்சாரம் மற்றும் எலெக்ட்ரிக் ஷாக் ஏற்படும். உடனே அந்த வனவிலங்குகள் ஓடிவிடும்.
தற்போது 7 வனச்சரகங்களுக்கும் தலா ஒரு கருவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கருவியின் பயன்பாடு நன்றாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே தேவைக்கு ஏற்ப கூடுதலாக கருவி வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.