பள்ளி மாணவனை கடித்துக்குதறிய குரங்கு


பள்ளி மாணவனை கடித்துக்குதறிய குரங்கு
x

விக்கிரமசிங்கபுரம் அருகே பள்ளி மாணவனை குரங்கு கடித்துக் குதறியது. அவனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்,:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள வடக்கு அகஸ்தியர்புரம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கவின் (வயது 14). இவன் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் செல்வது வழக்கம்.

நேற்று காலை 8 மணி அளவில் கவின் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் புறப்பட்டான். 2 வீடுகளை தாண்டி சென்றபோது, திடீரென்று வெள்ளை மந்தி (குரங்கு) பாய்ந்து வந்து கவினின் வலது காலை பிடித்து, கடித்துக் குதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் வலியால் அலறி துடித்தான். இதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் கம்பை எடுத்து வந்து குரங்கை விரட்டினார்கள்.

பின்னர் காலில் பலத்த காயம் அடைந்த கவினை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், 'வடக்கு அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி ஏராளமான குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்ற மாணவனை குரங்கு கடித்துக் குதறியுள்ளது. இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். எனவே, இந்த குரங்கை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story