தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும்


தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும்
x

வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கலெக்டரிடம் வார்டு உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பத்தூர்

குறைதீர்வுநாள் கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் குடிநீர், சாலை வசதி, வீட்டுமனை பட்டா, கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 பொது நல மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் ஆம்பூரை அடுத்த மாதனூர் ஒன்றியத்தில் உள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நவீன்குமார், மோகன், மாலதி, மகேஸ்வரி, சுரேந்தர், அரிநாதன் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நம்பிக்கை இல்லா தீர்மானம்

வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் பணிகளை வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது இல்லை. பாட்டூர் கிராமத்தில் எந்த ஒரு பணியும் நடைபெறாத பட்சத்தில் குடிநீர் குழாய் பதித்ததாகவும், சாலைகள் செப்பனிடப்பட்டதாகவும் பொய் கணக்கு எழுதி ஆபரேட்டர்கள் பெயரில் பில் போட்டு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

இது போன்று பல முறைகேடுகள் நடக்கிறது. எனவே, வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் கலெக்டர் நேரில் விசாரணை நடத்தி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவரை தகுதி நீக்கம் செய்ய நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

சாலை வசதி

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஜவ்வாதுமலை கமிட்டி சார்பில் அளித்த மனுவில், ஜவ்வாதுமலை, புதூர் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்குப்பம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் இருந்து நடுக்குப்பம் கிராமம் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இரு கிராமங்களுக்கும் போதுமான சாலை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால் பலர் பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டனர். இது தொடர்பாக வருவாய்த் துறையினருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை வசதி ஏற்படுத்தித் தர யாரும் முன்வரவில்லை. எனவே, உடனடியாக சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

ரொக்கப்பரிசு

கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, ஒவியப்போட்டி நடத்தி வெற்றி பெற்ற 30 பேருக்கு ரூ.42 ஆயிரம் மதிப்பிலான ரொக்க பரிசு மற்றும் கேடயம், சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ்ராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வம், ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்ராயன், தாட்கோ மேலாளர் ராஜஸ்ரீ, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story