பவானி பஸ்நிலையம் அருகே மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது
பவானி பஸ்நிலையம் அருகே மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது
பவானி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலையை சேர்ந்தவர் திருமலை ராஜா (வயது 22). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பவானி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக திருமலைராஜா மோட்டார்சைக்கிளில் சென்றார்.
மோட்டார்சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சென்றபோது, மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் மோட்டார்சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது.
மேலும் இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பெட்ரோல் டேங்க்கில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. எப்படியோ அதில் தீப்பற்றிக்கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.