காரில் வந்து மயக்க பிஸ்கெட் கொடுத்து ஆடுகள் திருடிய மர்ம கும்பல்


காரில் வந்து மயக்க பிஸ்கெட் கொடுத்து ஆடுகள் திருடிய மர்ம கும்பல்
x

வாணியம்பாடியில் காரில் வந்த மர்ம கும்பல், ரோட்டில் சுற்றித்திரிந்த ஆடுகளுக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து கடத்தி சென்றது. இந்த சம்பவம் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர்

காரில் வந்த மர்ம கும்பல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் கோணமேடு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகளை காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் ரோடுகளில் சுற்றித்திரிந்து விட்டு மாலையில் வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று காலை வாணியம்பாடி ஆசிரியர் நகர் முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றித்திரிந்தன. அப்போது ஒரு பெண், குழந்தை என குடும்பத்துடன் காரில் வந்த ஒரு கும்பல் காரை தெருவின் ஓரமாக காரை நிறுத்தி உள்ளனர்.

ஆடுகள் கடத்தல்

பின்னர் காரில் வந்தவர்கள் தங்களுடன் அழைத்து வந்த குழந்தைக்கு ஆட்டை காண்பிப்பது போன்று ஆட்டுக்கு மயக்க பிஸ்கெட்டை கொடுத்துள்ளனர். அதைசாப்பிட்ட ஆடு சில வினாடிகளில் மயக்கமடைந்துள்ளது. உடனே அந்த ஆட்டை தூக்கி காருக்குள் போட்டுள்ளனர். இதே போல் 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனை அப்பகுதியை சேர்ந்த டெக்னீசியன் ஒருவர் பார்த்துள்ளார். அவர், தனது வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக காரை நிறுத்தி மர்ம கும்பல் ஆடுகளை திருடியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

வீடியோ வைரல்

இந்த வீடியோ வைரலானது. இதை பார்த்த வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்துடன் காரில் வந்து மயக்க பிஸ்கெட் கொடுத்து ஆடுகளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story