பொள்ளாச்சியில் புறக்கணிக்கப்படும் புறவழிச்சாலை


பொள்ளாச்சியில் புறக்கணிக்கப்படும் புறவழிச்சாலை
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் புறக்கணிக்கப்படும் மேற்கு புறவழிச்சாலை பணிகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் புறக்கணிக்கப்படும் மேற்கு புறவழிச்சாலை பணிகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என எதிர்பார்த்து உள்ளனர்.

சாலை பணிகள் நிறுத்தம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்திமில் அருகில் தொடங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்தூர், நல்லூர் வழியாக ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டி வரை 8.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.

தற்போது 3 மீட்டர் நீளமுள்ள சாலை 10 மீட்டருக்கு அகலப்படுத்தப்படுகிறது. மேலும் சிறு பாலங்களும் கட்டப்படுகின்றன. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே இருந்த சாலையை தோண்டி ஜல்லி கற்கள் போடப்பட்டன. இதற்கிடையே கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெறாமல் புறக்கணிக்கப்படும் நிலையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-

நடந்து செல்ல முடியவில்லை

ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த சரஸ்வதி:-

மேற்கு புறவழிச்சாலை அமைக்க நிலத்தை கையகப்படுத்தி பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே இருந்த சாலையை தோண்டி அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதன் பிறகும் பணிகளை தொடங்காமல் நிறுத்தி விட்டனர். இரவு நேரங்களில் சாலையில் வர முடியவில்லை. நடந்து செல்ல முடியாத அளவிற்கு கூட சாகச சாலையாக மாறி விட்டது. இதனால் பெண்கள் மற்றும் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமப்படுகின்றனர். பொள்ளாச்சிக்கு கடைக்கு பொருட்கள் வாங்கி வர முடியவில்லை. எனவே, சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

போராட்டம் நடத்த முடிவு

டி.நல்லிகவுண்டன்பாளையம் தவசெல்வகுமரன்:-

நல்லூரில் இருந்து டி.நல்லிகவுண்டன்பாளையம் செல்லும் சாலை புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் மட்டுமல்ல பகல் நேரத்தில் அந்த வழியாக செல்வதற்கு அச்சமாக உள்ளது. மேலும் ஆங்காங்கே சாலையை தோண்டி போட்டு இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பகல் நேரங்களில் சாலையில் செல்வது சிரமமாக உள்ளது. சாலையை அகலப்படுத்துகிறோம் என்று கூறி கிடப்பில் போட்டு உள்ளனர். இதன் காரணமாக தற்போது சாலை பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் மோசமாக உள்ளது. குழிகள் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகை இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் நடக்கிறது. பணிகளை தொடங்கவில்லை என்றால் விரைவில் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேவம்பாடிவலசு குமரகுருபரன்:-

மேற்கு புறவழிச்சாலை செல்லும் கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தற்போது சாலை பணிகள் மேற்கொள்ளாமல் ரோடு மோசமாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் விளை பொருட்களை வாகனங்களில் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே விளை பொருட்களுக்கு விலை இல்லாத நிலையில் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுகிறது.

புழுதி பறக்கும் சாலை

காளிபாளையம் ரங்கநாதன்:-

புறவழிச்சாலை அமைக்க ஏற்கனவே இருந்த சாலையை தோண்டி ஜல்லி கற்களை போட்டனர். ஆனால் அதன்பிறகு எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் அவசர தேவைக்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மேலும் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மழை பெய்தால் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே, நிறுத்திய பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.

(பாக்ஸ்) நிலம் கையகப்படுத்த, சாலை பணிக்கு

ரூ.73 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு

அதிகாரிகள் தகவல்

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் (திட்டங்கள்) கூறியதாவது:-

பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை 8.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக முதலில் ரூ.50 கோடியே 35 லட்சத்து 30 ஆயிரத்துக்கு தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டது. அதன்பிறகு நிலம் கையகப்படுத்த, சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய திருத்தி அனுப்பப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஆனதால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஆனது. தற்போது ரூ.73 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தாளக்கரை, ஜமீன்ஊத்துக்குளி கிராமங்களில் நிலம் கையகப்படுத்த ரூ.15 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

வருவாய் துறைக்கு இந்த தொகையை டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குழாய்களை மாற்றி அமைக்காமல் சாலை பணிகளை மேற்கொண்டால் மீண்டும் சாலைகளை தோண்ட வேண்டியது இருக்கும். இதற்காக குழாய் மாற்றி அமைக்கும் பணிகளுக்கு தேவைப்படும் நிதி குறித்து மதிப்பீடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்கப்பட்டு உள்ளது. குழாய்களை மாற்றி அமைத்ததும் சாலை பணிகள் தொடங்கப்படும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story