தூத்துக்குடியில் புதிய விசைப்படகை கடலில் இறக்கும் போது சரிந்து விழுந்து விபத்து
தூத்துக்குடியில் புதிய விசைப்படகை கடலில் இறக்கும் போது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர்.
தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட விசைப்படகை கடலில் இறக்கும் போது சரிந்து விழுந்து விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
புதிய விசைப்படகு
தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் தனியார் படகு கட்டும் தளம் உள்ளது. இங்கு விசைப்படகுகள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடியை சேர்ந்த அண்டோ என்பவருக்கு சொந்தமாக புதிய விசைப்படகு கட்டப்பட்டது. இந்த படகு கட்டும் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததால், நேற்று கடலில் இறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலையில் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து விசைப்படகை மீன்பிடி துறைமுக பகுதி கடலில் இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
விபத்து
அப்போது எதிர்பாராதவிதமாக விசைப்படகு பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. இதில் படகை கடலில் இறக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த அண்டோ, அகிலன் ஆகிய 2 மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மற்றும் தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.