ஓகைப்பேரையூரில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும்


ஓகைப்பேரையூரில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும்
x

ஓகைப்பேரையூரில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

திருவாரூர்

தடுப்பு சுவர் இடிந்து ஆற்றுக்குள் விழுந்துள்ள பாலத்தை அகற்றிவிட்டு ஓகைப்பேரையூரில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பு சுவர் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில் நடுபனையனார் ஆற்றின் குறுக்கே அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை ஓகைப்பேரையூர், வடபாதி, நாகராஜன்கோட்டகம், ராமானுஜமணலி, கலிமங்கலம், திட்டச்சேரி, மூலங்குடி, வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

இந்த பாலம் பழுதடைந்த நிலையில் பலம் இழந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பக்கம் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் முற்றிலும் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதனால் பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

இதனால் அந்த பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் தவறி ஆற்றுக்குள் விழும் அபாயமும் உள்ளது. எனவே பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக பாலம் கட்டித்தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

இதுகுறித்து கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் கூறுகையில், 100 ஆண்டுகளை கடந்த பாலம் என்பதால், அதன் பலம் குறைந்து விட்டது. அதனால் தான் ஒரு பக்கம் தடுப்பு சுவர் முழுமையாக இடிந்து விழுந்து விட்டது. மேலும் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பாலம் பழுதடைந்த நிலையில் இருந்தும், வேறு வழியின்றி ஆபத்தான பாலத்தையே பள்ளி மாணவர்கள், பள்ளி வாகனங்கள், ஏனைய வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். பாலத்தை பயன்படுத்தி வந்தாலும், பாலத்தை கடந்து சென்று வருவதில் மிகவும் அச்சம் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் பலர் ஆற்றுக்குள் விழுந்து காயம் அடைந்துள்ளனர். அதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் பாலத்தை கடக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. அதனால், பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வாகன ஓட்டிகள் அவதி

கூத்தாநல்லூரை சேர்ந்த முருகவேல் கூறுகையில், பாலம் பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அதே பாலத்தை பயன்படுத்த வேண்டிய நிலையே தொடர்கிறது. திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால் இந்த சாலையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சாலையில் பழுதடைந்த பாலம் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. பழுதடைந்த பாலத்தில் வாகனங்களை எந்த கோணத்தில் திருப்ப வேண்டும் என்று புரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். அதனால், பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிதாக அகலமான பாலம் கட்டித்தர வேண்டும் என்றார்.


Next Story