கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டித்தரப்படும்
கொடியம்பாளையம்-மகேந்திரப்பள்ளி இடையே கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டித்தரப்படும் என ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
கொள்ளிடம்:
கொடியம்பாளையம்-மகேந்திரப்பள்ளி இடையே கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டித்தரப்படும் என ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானு சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் வரவேற்றார். இளநிலை உதவியாளர் சரத்குமார் அறிக்கையை படித்தார்.கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-
அங்குதன் (தி.மு.க.): அரசுபள்ளி மாணவர்கள் காலை, மாலை இரண்டு நேரங்களிலும் பஸ் வசதியின்றி பஸ் படியில் தொங்கியப்படி செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் அதிகமாக வருகிறது. இதற்கு சுகாதாரத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய ரேஷன் கடை
லட்சுமி பாலமுருகன் (தி.மு.க.): காட்டூர் ஊராட்சியில் சுப்பராயபுரம் கிராமத்தில் உப்பு நீர் அதிகமாக இருப்பதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் புதிய குளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புளியந்துரை கிராமத்தில் பிள்ளையார் கோவில் கிராமத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும்.மஞ்சுரா தேவி ரமேஷ் (தி.மு.க.): திருமுல்லைவாசல், ராதாநல்லூர் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு தனிநபர் கழிவறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வழதலைக்குடி கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும். இருதய நகரில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
சிவபாலன் (பா.ம.க.): கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் படுகை கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். அவர்களுக்கு இரவு முழுவதும் அப்பகுதி மக்களிடம் இருந்து பணியாற்றிய கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பானுசேகர் (காங்கிரஸ்): தண்டேசநல்லூர் துணை மின் நிலையம் உயர் மின்னழுத்த பணிகள் நடைபெற்ற நிலையில் அதனை செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காமராஜ் (வி.சி.க): மகாராஜபுரம் ஊராட்சியில் சாலை, குடிநீர், மின்சாரம், அத்தியாவசிய பணிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய பாலம்
ஒன்றியக்குழு தலைவர்: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட வேண்டும். ரூ.150 கோடி மதிப்பீட்டில் கொடியம்பாளையம் -மகேந்திரப்பள்ளி இடையில் கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டித்தரப்படும். திருக்கருகாவூர் கிராமத்தில் தகன மேடையுடன் மயான கொட்டகை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15-வது நிதி குழுவின் கீழ் பள்ளிக்கட்டிடம், காம்பவுண்ட் சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.