அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடியில் புதிய கட்டிடம்


அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடியில் புதிய கட்டிடம்
x

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடியில் புதிய கட்டிடம் கட்ட அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடியில் புதிய கட்டிடம் கட்ட அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.

அடிக்கல் நாட்டு விழா

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் 227 படுக்கை வசதிகள் கொண்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்துவதற்கான புதிய கட்டிடம் கட்ட அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

ஊரக நல துணை இயக்குனர் முருகவேல் வரவேற்றார். இதில் அரசு மருத்துவமனை கல்வெட்டை திறந்து வைத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியது போல் குடியிருப்பு பகுதிகளில், புதிய மருத்துவ கட்டமைப்பு மூலம் இயங்கும் வகையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் இந்த மையங்கள் அமைக்கப்படும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தற்போது 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன.

மருத்துவக்காப்பீடு திட்டம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் 227 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடம் அமைய உள்ளது. ஏற்கனவே உள்ள 212 படுக்கை வசதிகளுடன் மொத்தம் 439 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படுகிறது. ராஜபாளையம் மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் மருத்துவக்காப்பீடு திட்டம் மூலம் 2020-2021-ம் ஆண்டில் 478 பயனாளிகளும், 2021-2022-ம் ஆண்டில் 721 பயனாளிகளும், 2022-2023-ம் ஆண்டு 918 பயனாளிகளும் பயன்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்பது தி.மு.க. ஆட்சியில் மட்டும்தான். இந்த தொகுதியில் வளர்ச்சி அடைய பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது என்றார்.

விழாவில் தனுஷ்குமார் எம்.பி,, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், சேத்தூர் மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சித்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமான பணிக்கான கல்வெட்டை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னதாக அருப்புக்கோட்டை ஒன்றியம் செம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணிகளை திறந்து வைத்தனர்.


Next Story