கறம்பக்குடி நீர்ப்பாசன பிரிவு அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்


கறம்பக்குடி நீர்ப்பாசன பிரிவு அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை

நீர்ப்பாசன பிரிவு அலுவலகம்

கறம்பக்குடியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி துறை சார்பில் நீர்ப்பாசன பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டது. கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் அனுமார் கோவில் அருகே அரசுக்கு சொந்தமான ஓட்டு கட்டிடத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது. கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள், அக்கினி ஆற்று உப வடிநில பகுதி மற்றும் 10 தடுப்பணைகள் இந்த அலுவலகத்தின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் உள்ளன.

மழைக்காலங்களில் பாசன குளங்களுக்கு வரத்து வாய்க்கால்களின் மூலம் தண்ணீர் செல்வதை உறுதி செய்வது, குளங்களில் உடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பது, தடுப்பணை பராமரிப்பு போன்றவை இந்த அலுவலகத்தின் பணி என்பதால் இந்த அலுவலகத்திற்கு விவசாயிகள் அடிக்கடி வந்து செல்வர்.

மணல் கடத்தல்

இந்தநிலையில் இந்த பாசன பிரிவு அலுவலகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைய தொடங்கியது. தொடர்ந்து சுவர்கள், ஓடுகள் போன்றவை இடிந்து கொட்டத்தொடங்கின. இதனால் அங்கு அலுவலகம் செயல்படுவது நிறுத்தப்பட்டது. இந்த அலுவலகத்தில் பணியாற்றும் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் மற்றும் பணி ஆய்வாளர்கள் அலுவலகம் இல்லாமலேயே தற்போது பணியாற்றி வருகின்றனர்.

இதனால் அலுவலக பதிவேடுகளை சொந்த பொறுப்பில் வைத்து பராமரிக்கும் நிலை உள்ளது. மேலும் அலுவலகம் செயல்படாததால் மழைக்காலங்களில் இயற்கை இடர்பாடுகள், குளம் உடைப்பு போன்ற தகவல்களை யாரிடம் சொல்வது என தெரியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

இதுத்தவிர குளம் ஆக்கிரமிப்பு, வரத்து வாரி ஆக்கிரமிப்பு, காட்டாற்றில் மணல் கடத்தல், குளங்களில் வண்டல் மண் எடுப்பது போன்ற முறைகேடுகளையும் தடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே இடிந்து பாழடைந்து கிடக்கும் கறம்பக்குடி பொதுப்பணித்துறை நீா் பாசனப்பிரிவு அலுவலகத்தை முழுமையாக இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கால விரயம்

கறம்பக்குடியை சேர்ந்த மதிவாணன்:- ஒரு பொறியாளர், 4 பணி ஆய்வாளர்கள், 5 பாசன பிரிவு உதவியாளர்கள் என செயல்பட்டு வந்த இந்த அலுவலகம் தற்போது செயல்படாமல் முடங்கி கிடப்பதால் விவசாயிகள் பெரும் துன்பம் அனுபவித்து வருகின்றனர். மானிய வயல் அணைக்கட்டு பகுதியில் தற்போது முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க முடியவில்லை. மேலும், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள், குறைகள் போன்றவற்றை தெரிவிக்க புதுக்கோட்டை சென்று பாசனப்பிரிவு அதிகாரிகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலவிரயம் ஏற்படுவதோடு பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண முடியாத நிலை உள்ளது. எனவே கறம்பக்குடி நீர்பாசனப்பிரிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் திண்டாட்டம்

கறம்பக்குடி பீலிதெருவை சேர்ந்த ரெங்கசாமி:- கடந்த 15 ஆண்டுகளாக அலுவலகம் செயல்படாததால் மழைக்காலங்களில் வரத்து வாரி அடைப்பு மற்றும் உடைப்பு குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். தற்போது பல இடங்களில் புதிய அலுவலகங்கள் தொடங்கப்படும் நிலையில் 60 ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டு வந்த அலுவலகம் தற்போது செயல் இழந்து கிடப்பது வருத்தமாக உள்ளது. எனவே விவசாயிகளின் நலனை கருதி நீர்ப்பாசன பிரிவு அலுவலக கட்டிடத்தை உடனே கட்ட வேண்டும். அப்போது தான் பாசனப்பிரிவு அலுவலர்கள் கறம்பக்குடியில் தங்கி பணியாற்றும் நிலை உருவாகும்.

புதிதாக கட்ட வேண்டும்

கறம்பக்குடி தென்னகர் சின்னப்பா:- ஒரு தாலுகா தலைமை இடத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது. பல ஆண்டுகளாக கட்டிடம் இடிந்து கிடக்கும் நிலையில் பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இந்த கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் பாசன குளம் சார்ந்த எந்த தகவல்களையும் பெறமுடியாத நிலை உள்ளது. பாசனகுளம் மேம்பாட்டிற்காக தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ள நிலையில் நீா் பாசன பிரிவு அலுவலகத்தை உடனே புதிதாக கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story