வங்கக்கடலில் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு
மாண்டஸ் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் வருகிற 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இது புயலாக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல், நேற்று முன்தினம் காலை கரையை கடந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றது. இதன் காரணமாக வட கடலோர தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்தது. புயல் கரையை கடந்தாலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக கடல் சீற்றத்துடனேயே இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுதினமும் (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதனைத்தொடர்ந்து, வங்கக்கடலில் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும், இது அடுத்தகட்டமாக புயலாக மாறுமா? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவலை அதன் நகர்வை பொறுத்துதான் தெரிவிக்க முடியும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போதைய கணிப்பின்படி, இது புயலாக மாறி, இலங்கை மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், அந்த நேரத்தில் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு புயல் உருவாகும் பட்சத்தில், ஏமன் நாடு ஏற்கனவே பரிந்துரைத்து இருக்கும் 'மோகா' என்ற பெயர் சூட்டப்படும்.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஏற்காடு 10 செ.மீ., வடபுதுப்பட்டு 9 செ.மீ., ஆம்பூர் 8 செ.மீ., வாலாஜா, ஆற்காடு, அம்மூர் தலா 7 செ.மீ., ஆலங்காயம், சின்னக்கல்லார் தலா 6 செ.மீ., ஜமுனாமரத்தூர், ஆர்.கே.பேட்டை, ஊட்டி, நடுவட்டம், கோடநாடு, வாணியம்பாடி, கிளென்மோர்கன், வால்பாறை தலா 5 செ.மீ., கோத்தகிரி, காட்பாடி, சின்கோனா, சோளிங்கர், மேலாளத்தூர், கீழ்கோதையார், அம்முண்டி, விரிஞ்சிபுரம், அம்பத்தூர் தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.