விவசாய சங்கங்களை இணைத்து புதிய இயக்கம் தொடக்கம்
பச்சை தேயிலைக்கு உரிய விலை கேட்டு போராட விவசாய சங்கங்களை இணைத்து புதிய இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
பச்சை தேயிலைக்கு உரிய விலை கேட்டு போராட விவசாய சங்கங்களை இணைத்து புதிய இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
புதிய இயக்கம்
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரி பல்வேறு விவசாய சங்கங்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் தீர்வு காணப்படவில்லை.
அந்த விவசாய சங்கங்கள், அமைப்புகளை ஒன்று திரட்டி ஒரு இயக்கமாக மாற்றி, போராட்டங்களை முன்னெடுக்க விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர். அதன்படி 'சிறு தேயிலை விவசாயிகளை காப்பாற்றுங்கள்' என்ற இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஜே.பி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகி அய்யாரு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கவன ஈர்ப்பு போராட்டம்
கூட்டத்தில் பச்சை தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் விரைவில் ஊட்டியில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கூறுகையில், இன்று(நேற்று) நடந்த கூட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.35 வழங்க வலியுறுத்துவது, விலை நிர்ணயம் செய்ய நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர், மத்திய மந்திரிகளை சந்திப்பது, அவர்களது கவனத்தை ஈர்க்க போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது என்றார்.