புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விரைவில் கட்ட வேண்டும்
சேத்திரபாலபுரம் ஊராட்சி அரையபுரத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை விரைவில் கட்ட வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குத்தாலம்:
சேத்திரபாலபுரம் ஊராட்சி அரையபுரத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை விரைவில் கட்ட வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாதாரண கூட்டம்
குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினருக்கான சாதாரண மாதாந்திர கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், கஜேந்திரன், துணைத்தலைவர் முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 50 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களை உதவியாளர் நிவேதா வாசித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:
ராஜா(தி.மு.க.):- சேத்திரபாலபுரம் ஊராட்சி அரையபுரம் மெயின் ரோட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை போர்க்கால அடிப்படையில் கட்ட வேண்டும்.
குப்பை அள்ளுவதில்லை
புவனேஸ்வரி(தி.மு.க.):- கடக்கம் ஊராட்சி மேட்டு தெருவில் புதிய சாலை அமைத்து தர வேண்டும், துப்புரவு பணியாளர்கள் 8 மாதம் காலமாக குப்பைகளை அள்ளுவதில்லை. கேட்டால் குப்பை வண்டி உடைந்து விட்டதாக கூறுகின்றனர். எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பத்மாவதி(தி.மு.க.):- தேரழுந்தூர் புது அக்ரஹாரம் தெருவில் புதிய சாலையும், மாட்டாங்கரையில் பழுதடைந்துள்ள மிகவும் மோசமான சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என்றனர்.
வழக்கறிஞர் வினோத் (பா.ஜ.க.): கோமல் ஊராட்சியில் நடைபெறுகின்ற கிராம சபைக் கூட்டங்களில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும், அப்பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் அழைப்பு கொடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் புறக்கணிக்கின்றனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
ராஜவள்ளி(தி.மு.க.):- திருவாலங்காடு ஊராட்சி வடாரனேசுர சுவாமி சன்னதி தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என்றார்.
பாஸ்கரன்(அ.தி.மு.க.): பெரம்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்றார்.
சத்யா(அ.தி.மு.க.):- கப்பூர் ஊராட்சியில் சிவன் கோவில் தெரு,கந்தமங்கலம் கீழத்தெரு ஆகியவற்றில் தார் சாலை அமைக்க வேண்டும்.
ராமதாஸ்(தி.மு.க.):- வில்லியனூர் ஊராட்சி சேண்டிருப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என்றார்.
ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் கூறியதாவது:- அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிதி நிலைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்றார். இக்கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.